குரு பெயரைக் காப்பாற்றிய பி.வி.சிந்து

பேட்மிண்டனை பொறுத்த வரை இந்திய விளம்பர உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் சாய்னா நேவால். தற்போது 26 வயதான சாய்னா நேவாலுக்கு 12 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் விளம்பரம் ஒப்பந்தம் இருக்கிறது. தற்போது சாய்னா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.  இன்னும் 4 வருடங்களில் இளசுகளின் ‘ரோல் மாடல்’ என்ற அந்தஸ்த்தை சாய்னா இழக்கக் கூடும். இந்த நேரத்தில்தான் சிந்து ரியோவில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். இதையடுத்து நிறுவனங்கள் சிந்து பக்கம் சாய்ந்துள்ளன.  கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டிலான விளம்பர ஒப்பந்தங்கள் சிந்துவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இனிமேல், அவரது விளம்பர விவகாரங்களை ‘பேஸ்லைன் வெஞ்சர்ஸ்’ என்ற நிறுவனம் கவனிக்கப் போகிறது.

ரியோவில் சிந்து வெள்ளி வென்ற போது நடிகர் ரஜினிகாந்த், ”தான் சிந்துவின் ரசிகராகவே மாறி விட்டேன்” என ட்விட் செய்திருந்தார். இந்த ட்விட் லட்சக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஒரு மிகப் பெரிய சினிமா நட்சத்திரமே சிந்துவின் ஃபேன் என்கிறார் என்றால் சும்மாவா என விளம்பர உலகம் சிந்துவைப் பார்த்து வாயைப் பிளந்தது. ரஜினிகாந்தின் இந்த ட்விட்தான் சிந்துவைத் தேடி விளம்பர நிறுவனங்கள் தேடி ஓடி முக்கிய காரணமாக அமைந்ததாம். கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தபடியாக மிக பிரபலமான விளையாட்டடு வீராங்கனை யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் சிந்துதான். இதனால்தான் சிந்துவின் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் வீரர்களை விட குறைவானத் தொகைக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.

ஆனால், மார்க்கெட் ஏறி வரும் நேரத்தில் சிந்து மிகுந்த கவனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தான் தோன்றும் விளம்பரங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருப்பதாக பேஸ்லைன் வெஞ்சர்ஸ் நிறுவத்தைச் சேர்ந்த துகின் மிஷ்ரா தெரிவித்துள்ளார். மேலும் ”மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் எந்த ஒரு பொருளிலும் சிந்து தோன்றப் போவதில்லை. நடுத்தரவர்க்க குடும்பத்தில் இருந்து வந்த சிந்துவுக்கு சமூகத்தின் மீது தனி  அக்கறை இருக்கிறது. அதனால், குழந்தைகளின் உடல் நலத்துக்கு இளைஞர்கள், இளைஞிகள் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்கும் எந்தவிதமாக பொருட்களிலும் அவர் நடிக்க மாட்டார். குளிர்பான நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுவது குறித்தும் அவர் இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை. ஆனால், அவர் எந்த முடிவு எடுத்தாலும் சமுக நலனை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கும்” எனவும் மிஷ்ரா கூறியுள்ளார்.

சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் கடந்த 2001ம் ஆண்டு புகழ்பெற்ற ‘ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்’ தொடரில் சாம்பியன் ஆனார். இந்த தொடரில் பிரகாஷ் படுகோனுக்கு பிறகு சாம்பியன் ஆன இரண்டாவது இந்திய பேட்மின்டன் வீரர் கோபிசந்த் ஆவார். அந்த சமயத்தில் கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கோபிசந்தை நடிக்க வைக்க முயற்சித்தன. ஆனால், ”சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் எந்த விதமான பொருட்களின் விளம்பரங்களிலும் நான் தோன்றப் போவதில்லை” என கோக், கோலா விளம்பரங்களில் நடிக்க கோபிசந்த் மறுத்து விட்டார்.

சிந்துவும் கோபிசந்த் போலவே சமூகத்தின் நலனைத்தான் முதன்மையானதாக கருதுகிறார். எனவே அவரது விருப்பம் போலத்தான் நிறுவனங்களின் தேர்வும் இருக்கும் என பேஸ்லைன் வெஞ்சர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.