50 சதவீதம் மானியம் நன்னீர் மீன் வளர்க்க கலெக்டர் தகவல்

மத்திய அரசின் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், நன்னீர் மீன், உவர் நீர் இறால் வளர்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்தார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில், நன்னீர் மீன் வளர்ப்பு, உவர் நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பு குளங்கள், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தொட்டிகள் சீரமைத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு (உரிய ஒதுக்கீடுப்படி) 50 சதவீத மானியம் வழங்கப்படும். இதைத் தவிர, மீன்வளர்ப்பு இடுபொருள்களுக்கும் 50 சதவீத மானியம் அனுமதிக்கப்படுகிறது.

நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீத மானியம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். உவர்நீர் இறால் வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3 லட்சத்தில் 50 சதவீத மானியம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தத்திட்டத்தில் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் விவசாயிகள் வருகிற 7–ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு, மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சி–42, 26–வது குறுக்குத்தெரு, மகாராஜ நகர், பாளையங்கோட்டை என்ற முவரியிலோ அல்லது தொலைபேசி எண்: 04622581488–ல் தொடர்பு கொள்ளலாம்.

திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர்  அலுவலகம் அல்லது சீர்காழியில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றார்.

More