ஓரின சேர்க்கை தொந்திரவுக்குள்ளன பள்ளி மாணவி தற்கொலை

ஓரின சேர்க்கை சகோதரிகளால் தொந்திரவுக்குள்ளன பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று நடத்தும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அதே கல்வி நிறுவனம் நடத்தும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் தனது சகோதரியுடன், விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் மூத்த சகோதரி வெளியே சென்று விட்டு விடுதி அறைக்கு வந்து பார்த்த போது, அறையின் கதவு பூட்டப் பட்டிருந்தது. எவ்வளவு முறை தட்டியும் கதவு திறக்கப்படாததால், விடுதி காப்பாளரை அவர் அணுகியுள்ளார். பின்னர், காப்பாளரின் உதவியுடன் கதவு திறக்கப்பட்டுள்ளது. அங்கு, அவரது இளைய சகோதரி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதை கண்டு கல்லூரியில் படிக்கும் மூத்த சகோதரி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சகோதரியிடம் இருந்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அதன்படி, தற்கொலை செய்து கொண்ட மாணவி, அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஓரினச் சேர்க்கை சகோதரிகளான, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டவர்கள் கொடுத்த தொந்திரவால் மன அழுத்ததிற்கு ஆளாகியிருந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆனால், இது போன்றதொரு புகார் எங்களுக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. அதேசமயம், நாங்கள் புகார் அளித்தோம். அதன் பேரிலேயே, விடுதியின் அறையை மாற்றித் தந்தனர் என தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வேறு சில மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.