சாம்சங் நோட் 7 செல்போனை விமானத்தில் பயன்படுத்த தடை

விமானப் பயணத்தின்போது பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகார்களையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம், புதிய பதிப்பான கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசியை சென்ற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசியில் பொருத்தப்பட்ட பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது அவை வெடிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 விற்பனையைத் தாற்காலிகமாக நிறுத்துவதாக சென்ற வாரம் அறிவித்தது. அத்துடன், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசிகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம், பாதுகாப்பு கருதி அந்த செல்லிடப்பேசி மாடலை விமானங்களில் பயன்படுத்தக் கூடாது என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் அவ்வகை போன்களை விமானங்களில் ஆன் செய்யவும், சார்ஜ் செய்யவும் கூடாது என்று அந்த ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது.

இதே பிரச்னை காரணமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், குவான்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய நிறுவனங்கள் விமானங்களில் இவ்வகை செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று பயணிகளை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.