கார் மீது லாரி மோதி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சேலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களான மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (20), ஈரோட்டைச் சேர்ந்த யதுநந்தன் (20) உள்பட 5 பேர் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னைக்கு சுற்றுலா சென்று விட்டு, காரில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சேலம் அருகே எருமாபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது.

அதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரியின் பின்புறம் பலமாக மோதியது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த விக்னேஷ், யதுநந்தன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மதுரையைச் சேர்ந்த தினேஷ், திருச்சியைச் சேர்ந்த பிரசன்னா மற்றும் கிரசன்சிஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் உயிரிழந்த தகவலை அறிந்த சக மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த விபத்து குறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.