சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வி!

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி, சீனாவின் ஃபுசோ நகரில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் இந்தியாவின் சார்பில், மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

இதில் சாய்னாவைப் பொறுத்த வரையில் இந்தப் போட்டி அவருக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, ரியோவில் அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 2-வது சுற்றிலேயே, தரவரிசையில் தன்னைவிட பின்தங்கிய உக்ரைனின் மரியா உலிடினாவிடம் வீழ்ந்தார். மேலும், காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.

தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் பார்ன்டிப் புரனாப்செர்ட்சுக்குடன் மோதினார் சாய்னா. முந்தைய போட்டிகளில் சாய்னா 9 முறை இவரை தோற்கடித்தாலும் இன்று ஏமாற்றமான முடிவே கிடைத்தது. 16-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் பார்ண்டிபிடம் தோற்றுப்போனார் சாய்னா. போட்டிக்கு முன்பு பேட்டியளித்த இவருடைய பயிற்சியாளர் விமல் குமார், சாய்னா இன்னும் முழு பலத்துடன் மீளவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அது மிகச்சரியாக நிரூபணம் ஆகியுள்ளது.

ரியோ ஒலிம்பிக் மூலம் “வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை’ என்ற பெருமையைத் தனதாக்கிய சிந்து, சீன தைபேயின் சியா சின் லீயை தனது முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில்  21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார் சிந்து.

More