‘சார்க்’ அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க பாகிஸ்தான் முயற்சி

தெற்காசியக் கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் சார்பில் இந்தியாவில் நடைபெறவுள்ள சூஃபி விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் குழு தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் உட்பட எட்டு நாடுகள் உள்ளன.

எனினும், சார்க் அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டிவருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்தமாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டின் 19வது உச்சிமாநாடு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலவும் போர் பதட்டதட்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 18-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியாக அடுத்த மாதம் இஸ்லாமாபாத் நகரில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இதே காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான் ஆகியவையும் இந்த மாநாட்டை புறக்கணித்தன. இதனால் 2016-ம் ஆண்டுக்கான சார்க் மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை பெற்றிருந்த நேபாளம், மாநாட்டை ரத்து செய்வதாக அறிவித்தது. இது சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.

சார்க் அமைப்பு சார்பில் இஸ்லாம் மதத்தின் சூஃபி பிரிவினருக்காக ஜெய்ப்பூரில் வரும் 14 முதல் 16-ஆம் தேதி வரை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய சார்க் நாடுகளிலிருந்து சூஃபியிஸத்தை பின்பற்றும் அறிஞர்கள் அடங்கிய குழுவினர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் சூஃபி குழு தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.