20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் தங்கமாக கை மாறியதா?

நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும் கள்ளநோட்டையும் ஒழிக்கும் நோக்கில் உயர் மதிப்பு ரூபாய்க நோட்டுக்களான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த 50 நாள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.வங்கியில் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.அடுத்த கட்டமாகா தங்க இறக்குமதி தொடர்பான தகவல்களைத் திரட்டிய மத்திய அமலாக்கத் துறையினர் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்தில் நகைக்கடைகளில் வியாபாரமே இல்லை எனப் புலம்பல் கேட்டது அல்லவா? இந்த நவம்பரில் மட்டும் 66 ஆயிரம் கிலோ தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் செய்த இறக்குமதியைவிட 14 ஆயிரம் கிலோ அதிகம். ஒட்டுமொத்தமாக தங்க நகை விற்பனை கடந்த 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டில் குறைவாக இருக்கும்போது, நவம்பர் மாதத்தில் மட்டும் தாறுமாறு விற்பனை எப்படி ஆனது என இப்போது புலன் விசாரணை நடக்கிறது.

சென்னையில் மட்டுமே சுமார் 7 ஆயிரம் கிலோ தங்கம் நவம்பரின் சில நாட்களில் விற்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இப்படி தங்கமாக மாறியிருக்கலாம் எனக் கணக்கிட்டிருக்கிறது அமலாக்கத் துறை. மாற்றிய பெரும்புள்ளிகள்மீது இப்போது விசாரணை வெளிச்சம் விழுந்திருக்கிறது.