மராட்டிய மாநிலத்தில் பாஜக அமைச்சர் காரில் 92 லட்சம் ரூபாய்

மகாராஷ்டிரா மாநில அமைச்சருக்கு சொந்தமான காரில் இருந்து 92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள உஸ்மனாபாத்மாவட்டத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாகன சோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உமர்கா தேக்சில் என்ற இடத்தில் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை ஆய்வு செய்தனர். அதில் ரூ.91.5 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த கார், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் நிறுவனத்துக்கு சொந்தமான கார் என தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் நர்னவாரே தெரிவித்துள்ளார்.

‘‘சர்க்கரை ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் கொண்டு செல்லப்பட்டது. முறைகேடு எதுவும் இல்லை’’ என அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘அமைச்சர் சுபாஷுக்கு சொந்தமான நிறுவனத்தின் மீதுஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது கருப்பு பணத்தை மாற்ற முயன்றுள்ளார். எனவே, சுபாஷை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார். மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற விஷயம் மூத்த பாஜ தலைவர்கள், முன்னனி நிறுவனங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற பாஜ தலைவர்களின் பணபரிவர்த்தனையை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

More