திருச்செந்தூர் அருகே அரசு நிதியை மோசடி செய்த பஞ்சாயத்து தலைவர் கைது

திருச்செந்தூர் அருகே பஞ்சாயத்து நிதி ரூ.36 லட்சத்தை மோசடி செய்ததாக பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் நங்கைமொழி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் உதயகுமார். இதே பஞ்சாயத்தில் துணை தலைவராக ஆணையூரை சேர்ந்த சித்ரலேகாவும், செயலாளராக கீதா என்பவரும் இருந்து வருகின்றனர்.

பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் அனைத்திருக்கும் செலவு செய்யப்படும் பணம் இவர்கள் கட்டுபாட்டில்தான் இருக்கும். இந்த நிலையில் உடன்குடி பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.சுப்புலட்சுமி, பஞ்சாயத்து வங்கி கணக்குகளை தணிக்கை செய்தார்.

அப்போது பஞ்சாயத்து தலைவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.36 லட்சத்து 9 ஆயிரத்து 727 மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இதற்கு துணைத்தலைவர் சித்திரலேகா, செயலாளர் சங்கீதா(39), பரமன்குறிச்சியில் உள்ள தனியார் வங்கி மேலாளர் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்புலெட்சுமி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து, மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார், துணை தலைவர் சித்ரலேகா, செயலாளர் கீதா ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு வங்கியின் மேலாளர் உடந்தையாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த 3 பேரையும் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். வங்கி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.