போயஸ் தோட்டத்திற்கு வெளியே வித்தியாசமாக சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராப் பாடகி

அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்ட சசிகலாவுக்கு அக்கட்சியின் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டதற்கு, பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என்று சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சென்னையை சேர்ந்த ராப் பாடகி ஒருவர், நேற்று இரவு வித்தியாசமான முறையில் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சோபியா அஷ்ரப், என்ற அந்த ராப் பாடகி, தன்னோட குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு, போயஸ் தோட்டத்திற்கு வெளியே, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோபமாக ராப் பாடல் ஒன்றை இசைத்து பாடியுள்ளார்.

”நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல” என்று கடும் கோபத்துடன் ராப் பாடலாக பாடிய அவர், அதை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Link: https://www.facebook.com/sofia.ashraf/videos/vb.687369534/10155797410024535/?type=2&theater