ராம்குமாரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது

ராம்குமாரின் பெற்றோர்கள் வராததால் நேற்று நடக்க இருந்த பிரேத பரிசோதனை, இன்று காலை நடைபெற உள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று முன் தினம், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி ராம்குமாரின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதற்கு சில அரசியல் கட்சியினரும், ராம்குமாரின் சமூகத்தினரும் ஆதரவாக களம் இறங்கி உள்ளனர். இதனால் ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராம்குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு வரும்வரை பிரேதபரிசோதனை செய்யக்கூடாது என்றும் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறினார். இதனால் பிற்பகல் வரை ராம்குமார் உடல் வைக்கப்பட்டு இருந்த அறை திறக்கப்படவில்லை.

பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்ராஜின் மனு மீது நடந்த விசாரணையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யலாம் என்று உத்தரவு வெளியானது. ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. பிற்பகல் 3.30 மணியளவில் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை கூடத்துக்கு வந்து ராம்குமாரின் உடலை இறுதியாக ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனை செய்வது குறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டாக்டர்களுடன், மாஜிஸ்திரேட்டு ஆலோசனை நடத்தினார். மாலை 5 மணி வரை ராம்குமாரின் பெற்றோர் வராததால் பிரேத பரிசோதனை நடத்துவதில் இழுபறி நீடித்தது. பெற்றோர் வராமல் பிரேத பரிசோதனை நடத்தமுடியாது என்று மாஜிஸ்திரேட்டு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அனுமதி கிடைக்காத காரணத்தால் பிரேத பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறும்போது, “ராம்குமாரின் பெற்றோர் வராததால் பிரேத பரிசோதனை நடத்தமுடியாது என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்துவிட்டார். ராம்குமார் பெற்றோர் வந்த உடன் பிரேதபரிசோதனை நடைபெறும். ராம்குமார் உடலை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் சமூக, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்” என்றார்.