சென்னையில் நடைபெற்று வரும் புயல் நிவாரண பணி குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை ‘வார்தா’ புயல் நேற்று முன்தினம் தாக்கியது. இதையடுத்து, அங்கு நடைபெற்று வரும் நிவாரண பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளர், தேசிய பேரிடர் மீட்புப்படை டைரக்டர் ஜெனரல் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் நிவாரண பணிகளில் ஈடுபட 29 படகுகளுடன் 8 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புப்படை டைரக்டர் ஜெனரல் எடுத்துரைத்தார். அதைக்கேட்ட ராஜ்நாத் சிங், மத்திய, மாநில படைகளின் தயார்நிலை குறித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் கோரிக்கை மனு சமர்ப்பித்தவுடன் மத்திய குழு நேரில் செல்ல தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார்.