எம்ஜிஆர் மற்றும் ரஜினி கலவையா ராகவா லாரன்ஸ்? கொதிக்கும் மக்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ராகவலா லாரன்ஸ், போராட்டத்திற்கு ரூ.1 கோடி தரவும் தான் தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தில் கலவரம் வெடித்ததற்கு லாரன்ஸ் போன்ற சினிமா கலைஞர்கள் தான் காரணம், என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாரன்ஸ், தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன், என்று அறிவித்தார். பிறகு மாணவர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறிய லாரன்ஸ், முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தை சந்தித்தார். பிறகு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை, ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியை கொண்டாட அனுமதி கேட்க சந்தித்தேன், என்றார்.

இதையடுத்து, பிரம்மாண்ட கேக் வெட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கொண்டாடியவர், சமீபத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கான படிப்பு செலவுக்காக நிதி திரட்ட தனி அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இப்படி தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் லாரன்ஸ், தனக்கு புதிதாக பட்டப் பெயர் ஒன்று வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த பட்ட பெயரால் மக்கள் அவர் மீது பெரும் கோபம் அடைந்துள்ளனர். அதாவது எம்.ஜி.ஆர் பட்டப் பெயரான மக்கள் திலகம் என்பதையும் ரஜினிகாந்தின் பட்டமான சூப்பர் ஸ்டார் என்பதையும் சேர்த்து ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை வைத்துக் கொண்டுள்ளார்.

லாரன்ஸின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் தான் அவருக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை லாரன்ஸின் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும், ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

முன்னணி நடிகர்கள் பலரும் பட்டப் பெயர் ஏதும் தேவையில்லை, என்ற முடிவு எடுத்து பல ஆண்டுகள் ஆகின்ற நிலையில், எம்.ஜி.ஆர் பாணியில்லாரன்ஸின் இந்த பட்டப் பெயர், அவரது அரசியல் ஆசையையும், தன்னை தலைவனாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் காட்டுவதாகவே உள்ளது.