பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். அவரது பயணத்தின் போது இந்தியா-ஜப்பான் இடையே மக்கள் பயன்பாட்டுக்கான அணு சக்தி  ஒப்பந்தம்  கையெழுத்தாகிறது.

ஜப்பான் பிரதமர்  சின்சோ அபே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இந்தியாவிற்கு வந்தார். அவரது பயணத்தின் போது,  மக்கள் பயன்பாட்டுக்கான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரிவான ஒப்புதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம்  ஜப்பான் செல்கிறார். இந்த  பயணத்தின் போது வருகிற 11ம் தேதியன்று  மோடியும், ஜப்பானிய பிரதமர் அபேவும் இந்த அணு சக்தி ஒப்பந்தம் குறித்து கையெழுத்திடுவார்கள் என  ஜப்பானிய நாளிதழான யோமியுரி ஷிம்பன் செய்தி வெளியிட்டுள்ளது.

அணு தொழில் நுட்பம் பகிர்வது தொடர்பான  ஒப்பந்தம் நிறைவேறுவதன் மூலம்  அணு தொழில் நுட்பத்தை ஜப்பான் இந்தியாவுக்கு அளிக்கும். இதன் மூலம் இரு தரப்பு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படும்.

2ம் உலகப்போரின் போது, அணு வீச்சில் மிகவும் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் உயிர்கள் அழிந்த நாடாக ஜப்பான் உள்ளது. எனவே அந்த நாட்டில் ஒரு தரப்பினர் இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. அதனால் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட்டது.

இந்தியா அணு ஆயுத பரிசோதனை நடத்தினால் , தாங்கள் அளிக்கும் அணு சக்தி பொருள்களை நிறுத்துவோம் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 3ம் தேதியன்று டெல்லியில்  ஜப்பானிய பாராளுமன்ற குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது. நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தையொட்டிய சந்திப்பாக அது அமைந்தது. அப்போது ஜப்பானுடன் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என மோடி  தெரிவித்தார்.

More