பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மாதந்தோறும் முறையே 1-ஆம் தேதியும், 16-ஆம் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது சிறிது அதிகரித்திருப்பதால், அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படலாம் என்று கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த விலை உயர்வு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதாக ஊடகங்கள் வெள்ளிக்கிழமை காலையில் செய்திகளை வெளியிட்டன.

எனினும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டன. அப்போது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதையடுத்து, தில்லியில் அந்த மாநில அரசு விதிக்கும் வரிகளுடன் சேர்த்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.68.94-க்கு (முந்தைய விலை ரூ.66.10) விற்கப்படுகிறது. இதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.56.68-ஆக (முந்தைய விலை ரூ.54.57) உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில்…: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.41-ஆகவும் (முந்தைய விலை ரூ.65.58), டீசலின் விலை லிட்டருக்கு ரூ.58.28-ஆகவும் (முந்தைய விலை ரூ.56.10) உயர்த்தப்பட்டுள்ளன.