நடிகர் கமல் ஹாசனுக்கு பதில் அளித்த பீட்டா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது பீட்டா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பீட்டா அமைப்பை தடை செய்யாமல், அவற்றின் நடவடிக்கையை ஒழுங்குப் படுத்தலாம், என்று கூறியதோடு, இங்கு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் காளைகள் மீது அமர்ந்து நடைபெறும், ‘புல் ரைடிங்’ போன்ற விளையாட்டுகளை தடை செய்ய, பீட்டா முயற்சிக்க வேண்டும், என்றும் கூறினார்.

இந்த நிலையில், கமலின் கருத்துக்கு பதில் அளித்து பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா, ”’பீட்டா இந்தியா’ என்பது, இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பதே, இதன் குறிக்கோள். ‘பீட்டா யு.எஸ்.,’ அமைப்பு, அதற்காக, அமெரிக்காவில் போராடி வருகிறது. கமல் கூறிய விளையாட்டு, அங்கு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.