முதல் அமைச்சர் ஜெயலலிதா வீட்டை பார்க்க மக்களுக்கு அனுமதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் செப்டம்பர் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் சிகிச்சைப்பலனின்றி டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் காலமானார்.

டிசம்பர் 6ம் தேதி ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் அன்று மாலை எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேேய அடக்கம் செய்யப்பட்டது.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு தமிழகத்தின் மிக பாதுகாப்பு மிக்க பகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. அவரின் வீட்டிற்கு செல்லும் 200 அடிகளுக்குமுன் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி விடுவார்கள். இந்நிலையில் ஜெயலலிதா காலமானதையடுத்து,  அவர் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பார்க்க வந்தவர்களை, ஜெயலலிதாவின் வீட்டு கேட் வரை சென்று வர போலீசார்  அனுமதித்தனர். மக்கள் அவர் வீட்டை பார்த்து ஆறுதல் அடைந்து திரும்பினர்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்க்க வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கவுன்டர்பாளையத்தை சேர்ந்த கமலா கூறியது:‘பஸ் போக்குவரத்து இல்லாததாலும் அஞ்சலி செலுத்தும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் எங்களால் நேற்று வர முடியவில்லை. அதனால் இறுதியாக அவர் முகத்தை பார்க்கக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்ைல. அதனால் அவரை அடக்கம் செய்த இடத்தையும், அவர் வாழ்ந்த இல்லத்தையும் மன ஆறுதலுக்காக பார்க்க வந்தோம்.

அவர் கட்சியை சிறப்பாக நிர்வகித்தார். இனிவருபவர்கள் கட்சியை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தொண்டர்கள், தமிழக மக்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறார்கள் என்பது மிகுந்த கவலையாக உள்ளது’.வில்லிவாக்கத்தை சேர்ந்த விஜயா கூறியது: ‘ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட  இடத்தை பார்த்துவிட்டு அவர் வாழ்ந்த இல்லத்தை பார்த்து செல்வதற்காக வந்தோம். இந்த வீட்டை அவர் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்’.