ராணுவ வீரர்களுக்கு மக்கள் உறுதுணையாக நிற்க வேண்டும்: அமிதாப் பச்சன்

“இந்தியாவை எதிரிகளிடமிருந்து காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டிய தருணம் இது’ என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

நேற்று, 74வது பிறந்த நாளைக் கொண்டாடிய, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ”ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தரும் நேரமிது,” என, உருக்கமாக கூறினார். எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் நடிகர்கள், ஹிந்தி படங்களில் நடிப்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில், தன் பிறந்த நாளை நேற்று கொண்டாடிய, பிரபல நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது: பாகிஸ்தான் நடிகர்கள் ஹிந்தி படங்களில் நடிப்பது குறித்த விவாதத்துக்கு பதிலளிக்க நான் தயாராக இல்லை; நான் அனைத்து நடிகர்களையும் மதிக்கிறேன். எல்லையில் நடக்கும் சம்பவங்களால், நாடு தற்போது சீற்றத்துடன் உள்ளது. ராணுவ வீரர்களின் தியாகத்தால் தான், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும்; மற்ற பிரச்னைகள் குறித்த விவாதம் தேவையில்லாதது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘எல்லையில் நடைபெறும் நிகழ்வுகளால் நாட்டு மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு உயிரை கூட தியாகம் செய்யும் வீரர்களுக்காக நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த இதுவே சரியான தருணம்’’ என்றார். மேலும், ஒரு நாட்டை (பாகிஸ்தான்) சேர்ந்த நடிகர்களுக்கு தடை விதிக்கலாமா? கூடாதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் அனைத்து கலைஞர்களையும் மதிப்பவன்’’ என்று அமிதாப்பச்சன் பதில் அளித்தார்.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி டுவிட்டரில், ‘உங்களது பன்முகத்திறமையும், பணிவும் தான் ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. உங்களது நீண்ட ஆயுளுக்காகவும், உடல்நலனுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நான்கு முறை விருது :பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை பெற்று உள்ள நடிகர் அமிதாப், நான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த, ‘பிங்க்’ என்ற ஹிந்தி படம், மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.