நாளை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுகிறார்?

ரூபாய் நோட்டு விவகாரத்தில் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற கூட்டத் தொடரை முடக்கி வருகின்றன. இதே நிலை தொடர்வதை தடுக்க, பிரதமர் மோடி நாளை பார்லி.,யில் விளக்கமளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லி., கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல், அவையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாராளுமன்றத்தில் முழக்கமிட்டு வருவதுடன், அவைக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டம், பந்த், பேரணி என நடத்தி வருகின்றனர். சில கட்சிகள் பந்த்திற்கு ஆதரவு தெரிக்காவிட்டாலும், பேரணி நடத்தி வருகின்றன.

கூட்டத்தொடர் துவங்கி 10 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு மசோதா தாக்கலோ, ஆக்கபூர்வமான விவாதமோ நடக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்படும். எனவே இது தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் பலரை அழைத்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் எதிர்க்கட்சிகளின் அமளியை சமாளிக்க, அவர்கள் கோரிக்கை விடுப்பது போது பாராளுமன்றத்தில் பிரதமரே, ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இன்றும் வலியுறுத்தின. இதற்கு லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பிரதமர் மோடியும் விவாதத்தில் பங்கேற்பார். தேவைப்படும் பட்சத்தில் அவரே பதிலளிப்பார். ரூபாய் நோட்டு வாபஸ் செய்யப்பட்டது தொடர்பாக புகார்கள் இருந்தால் அது பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். அதற்காக எங்களின் நேர்மையை சந்தேகிக்காதீர்கள் என்றார். இதனால் நாளைக்கு பிரதமர் மோடி வருவார் என்பதும், அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.