500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்: தமிழகம் முழுவதும் 28 ஆம் தேதி போராட்டம்

செல்லாத நோட்டு அறிவிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன்பு 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்கள் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக நவ.24 முதல் 30ம் தேதி வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) செயலாளர் குமாரசாமி, எஸ்யூசிஐ செயலாளர் ரங்கசாமி (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட நான்கு இடதுசாரி கட்சி தலைவர்கள் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் மத்திய பாஜ அரசை எதிர்த்து நவம்பர் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இப்பிரச்னை தொடர்பாக அகில இந்திய அளவில் 6 இடதுசாரி கட்சிகள் தீவிர போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள நான்கு இடதுசாரி கட்சி தலைவர்கள் பேசி, வரும் 28ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: மோடி அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை உணர்ந்துதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் நவம்பர் 28ம் நாளை ‘தேசிய எதிர்ப்பு நாளாக’ அறிவித்திருக்கின்றன. அதை ஆதரித்து அந்தப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

நவம்பர் 28ம் தேதி தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்து நடத்த உள்ள அனைத்துவிதமான போராட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு திருமாவ ளவன் கூறியுள்ளார்.