கிருஷ்ணா நதிநீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங் களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்துவிடும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீரை அணையிலிருந்து திறந்து விடவில்லை.

சென்னை ஏரிகளில் தண்ணீர் இருந்ததால் தமிழக அதிகாரிகளும் ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக வடமாவட்டங்களில் பெரிய அளவில் மழை எதுவும் பெய்யவில்லை. சென்னையில் வெப்பமும் அதிகமாக இருப்பதால் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது. இதனால் அடுத்த சில வாரங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சோமசீலா, சைலம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து, சைலம் அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 24 டிஎம்சியாக அதிகரித்தது.

இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த 11ம் தேதி முதல் தமிழகத்திற்கு 290 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே, கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை கோரிக்கை விடுத்தது.

இதையேற்று, நேற்று காலை முதல் 500 கன அடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்வாய் சேதமானதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நிதி நீர், தமிழக ஆந்திர எல்லையில் உள்ள ஜீரோ பாயின்டை நாளை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து கடந்த திங்கள்கிழமை முதல் வினாடிக்கு 500 கன அடி வீதம், கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. கால்வாய் சேதம் அடைந்துள்ளதால், தமிழக ஆந்திர எல்லையில் உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டை நாளை தண்ணீர் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சாய் கிருஷ்ணா கால்வாய் வழியாக நாளை மறுநாள் பூண்டி நீர்த்தேக்கத்தை கிருஷ்ணா நதி நீர் சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.