திருவண்ணாமலையில் தவறான சிகிச்சை காரணமாக தொழிலாளி ஒருவர் இறந்தார்

திருவண்ணாமலை அருகே தவறான சிகிச்சை காரணமாக தொழிலாளி இறந்தார். இதையடுத்து கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அருகேயுள்ள அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு பரணிதரன் (4), ருத்ரா (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சுரேஷ் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் காலில் சிதைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு 35 தையல் போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுரேஷின் கால்சிதைவு பகுதியில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுரேஷ் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற சென்றார். சுரேஷை பரிசோதித்த டாக்டர் அருள் கால்வலி குறைவதற்கு ஊசி போட்டுள்ளார். அப்போது வீரியமிக்க ஊசி செலுத்துவதாகவும், சிறிதுநேரம் மயக்கமாக இருக்கும் என்று டாக்டர் அருள் கூறியுள்ளார். இதையடுத்து ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் சுரேஷ் மயங்கினார்.

அந்த சமயம் சுரேசின் செல்போனுக்கு அவரது மனைவி லட்சுமி போன் செய்தார். செல்போனில் பேசிய டாக்டர் அருள், கால் வலிக்கு ஊசி செலுத்தியதில் சுரேஷ் மயங்கிய நிலையில் உள்ளார். அவரை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கிளினிக்கிற்கு வந்து சுரேஷை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் சுரேஷ் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைக்கண்ட சுரேசின் மனைவி லட்சுமி, குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதார்கள். தவறான சிகிச்சையால் சுரேஷ் உயிரிழந்ததை அறிந்த டாக்டர் அருள் கிளினிக்கை பூட்டி விட்டு தலைமறைவானார். இதை அறிந்த சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜேந்திரன் நடத்திய விசாரணையில் அருள் போலி டாக்டர் என்பதும், ஏற்கனவே 2 முறை போலி டாக்டர் என கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து கிளினிக் வைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று காலை சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் போலி டாக்டர் அருள் நடத்தி வந்த கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் இணை இயக்குனர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் சாலையில் மறைந்திருந்த போலி டாக்டர் அருளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.