இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை வருகிறது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை வருகிறது, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

வருவாய்த்துறை செயலாளர் சந்தரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜி.லதா, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் மகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்பு வருவாய்த்துறை செயலாளர் சந்தரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:   வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதன் பாதிப்புகளை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள அனுபவம் 100 ஆண்டுகள் காணாத ஒன்று. அதுபோன்ற நிலை மீண்டும் வராமல் தடுக்க ‘பேரிடர் கால திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த திட்டம் மாநிலம், மாவட்டம், தாலுகா என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் தீயணைப்பு துறை, காவல் துறை என அனைத்து துறையினரும் இடம்பெற்றிருப்பார்கள். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட,  குறைவாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 994 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.  25ம் தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்க திட்டம்: வடகிழக்கு பருவமழை வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரிடர் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில பேரிடர் மீட்பு படைகளும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த சிறப்பு அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகள், கல்லூரிகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், நீர் நிலைகள் அடைப்பு உள்ளிட்ட பணிகளை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளபாதிப்பு ஏற்பட்டால் கடலோர காவல்படை, மத்திய பேரிடர் மீட்பு குழு, மத்திய பாதுகாப்பு படை உதவிகளை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அதனை பாதுகாத்து வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.140 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் அடையாறில் ஏற்கனவே ரூ.3.5 கோடியிலும், தற்போது ரூ.6 கோடியிலும் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது தொலைதொடர்புக்கு ஏற்பட்ட பாதிப்பு இந்த முறை நடக்கக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். செல்போன் டவர்கள் தாழ்வான இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. மக்களை மீட்கும் படகுகளுடன் தயாராக இருக்க மீனவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.