சென்னையில் புதிய ரூ. 500 ரூபாய் நோட்டு!

சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு  ஓரளவு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த 8-ந்தேதி திரும்ப பெற்றுக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தபால்நிலையங்கள் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வினியோகம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. 15-ந்தேதி புதிய 500 ரூபாய் நோட்டு டெல்லியில் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு விடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் கையில் கிடைத்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டது. ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நேற்று கிடைத்தன. இதனால், மக்களின் கஷ்டம் ஓரளவு தீர்ந்ததாக கூறப்படுகின்றது. கிண்டியில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ ஏ.டி.எம். மையத்தில் புதிய 500 ரூபாய் நோட்டு கிடைப்பது குறித்து நேற்று மதியம் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிப்பரப்பாகின. இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்கான கூட்டம் அலைமோதியது. புதிய 500 ரூபாய் கிடைத்த மகிழ்ச்சியில் பலர் பணத்துடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

சென்னையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் சில்லறை தட்டுப்பாடு கடுமையாக இருந்து வந்த வேளையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்திருப்பது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.