நரசிங் யாதவ் மீதான ஊக்கமருந்து புகாரை சிபிஐக்கு மாற்ற பிரதமர் அலுவலகம் பரிந்துரை

மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் மீதான ஊக்கமருந்து புகாரை சிபிஐ விசாரிக்க பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி வீரரான 25 வயதான நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் சாதிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த ஜுன், ஜுலை மாதங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுபற்றி விசாரித்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு வாரியம் நரசிங் யாதவுக்கு எதிராக சதி நடந்திருப்பதாக தெரிவித்தது.

யாதவுக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்து கலந்ததாக கூறி அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளித்தது. இதை9ன எதிர்த்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு வாரியம் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த அந்த அமைப்பு ரியோவில் நரசிங் யாதவ் பங்கேற்க இருந்த போட்டிக்கு ஒருநாள் முன்னதாக அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நரசிங் யாதவ் தன் மீதான புகாரை சிபிஐ விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர கோரிக்கை விடுத்தார். இதனையேற்றுக் கொண்ட பிரதமர் அலுவலகம் நரசிங் யாதவ் வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் உறுதி செய்துள்ளார்.