டோனி இல்லையென்றால் கோலி இல்லை சேவாக் பேச்சு

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் தோனி கொடுத்த டெஸ்ட் வாய்ப்பை பற்றி சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-12 ஆம் ஆண்டில்  ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று  தொடரை முழுமையாக இழந்தது.

இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட சேவாக் அந்த தொடர் பற்றி தற்போது வெளியிட்டுள்ள தகவலில் “ஆஸ்திரேலியாவுடனான அந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் விராத் கோஹ்லி சரியாக விளையாடவில்லை.

மேலும் அந்த சமயத்தில் ரோஹித் சர்மாவும் அறிமுகமாவில்லை. இதனால் விராத் கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் சர்மாவை களமிறக்க தேர்வு குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால் அப்போதைய கேப்டனாக இருந்த தோனியும், நானும் விராத் கோஹ்லி மீது முழு நம்பிக்கை வைத்து கோஹ்லியே அணியில் தொடர வேண்டும் என்று பரிந்துரை செய்தோம்.

மீதமுள்ள வரலாறு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சமயத்தில் தோனியும் நானும்  வேறு முடிவு எடுத்திருந்தால், இன்றைய இந்திய கிரிக்கெட் அணி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.