11 மாடி கட்டிடம் இன்று மவுலிவாக்கத்தில் தகர்க்கப்படுகிறது

சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான 11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட இருக்கிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றப்படுகிறது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் அருகருகே தனியார் நிறுவனம் சார்பில் 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 61 தொழிலாளர்கள் இறந்தனர். அதன் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அந்தக் கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்பு கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்தவுடன் தரைதளம், தரைதளத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள மற்றொரு தளம், 5-வது மாடியில் உள்ள தூண்கள் ஆகியவற்றில் வெடிபொருட்கள் நிரப்ப துளைபோடும் பணி நடந்தது. அப்போது கட்டிடத்தின் பாகங்கள் சிதறாமல் இருக்க சுற்றிலும் வலைபோன்ற வடிவில் உள்ள கம்பிகள் போட்டு கட்டப்பட்டது.

அடுத்தகட்டமாக, கட்டிடத்தை இடிக்கும் போது அதனை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணியில் சி.எம்.டி.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றிலும் 124 வீடுகள், கடைகள் மற்றும் சிறு நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகள் எந்த நிலையில் உள்ளன என ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள விரிசல்களை வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர்.

கட்டிடம் இடிக்கும் பணி குறித்து பொதுப்பணி துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-  2-ம் தேதி (இன்று) பகல் 2 முதல் 4 மணிக்குள் கட்டிடம் முழுமை யாக இடிக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கையாக, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் வசிப்பவர்கள் வெளி யேற்றப்பட்டு, மதானந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.ஜே. ஜெய்மாருதி மஹாலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டிட இடிப்புப் பணி முடிந்ததும் அவர்கள் வீடு திரும்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், இவ்வாறு கூறினார்.