மோனிகா குர்தே வழக்கு: கிரேடிட் கார்டை பயன்படுத்தி மாட்டிக்கொண்ட கொலையாளி

கோவாவில் பிரபல பெண் தொழிலதிபர் மோனிகா குர்தே, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்னாள் காவலாளி என்பது தெரிய வந்துள்ளது.

பிரபல வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான மோனிகா குர்தே, கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் நிர்வாண நிலையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, ராஜ்குமார் சிங் என்பவரை பெங்களூரில் போலீசார் கைது செய்தனர். மோனிகாவின் கிரேடிட் கார்டை எடுத்துச் சென்ற ராஜ்குமார் சிங், அதை பயன்படுத்தி போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் மோனிகா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்னாள் காவலாளி என்பது தெரிய வந்துள்ளது.