புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்!

பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இவ்விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநில போலீஸ் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை தொடர்ந்து வருகிறது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவின் கம்மானாஹாலி பகுதியில் சாலை ஒன்றில் இரவு இளம்பெண் நடந்து செல்கிறார். அப்போது அதே சாலையில் பைக்கில் வரும் இரு இளைஞர்கள், வழியை மறிக்கின்றனர். இளம்பெண்ணிடம் இளைஞர்கள் கொடூரமான முறையில் நடந்துக் கொள்கின்றனர். பின்னர் இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டு வேகமாக பைக்கில் செல்கின்றனர், இது தொடர்பான காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலை என்பதினால் இளம் பெண்ணுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. இளைஞர்கள் காட்டு மிராண்டி தனமாக இளம்பெண்ணிடம் நடந்துக் கொண்டு உள்ளனர். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனையானது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையானது ஞாயிறு அன்று அதிகாலை 2:30 மணியளவில் நடைபெற்று உள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகிஉள்ளது. இளம்பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி 50 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு சென்ற போதுதான் இச்சம்பமானது நிகழ்ந்து உள்ளது. பெங்களூருவில் பாலியல் தொல்லை என்பதை அம்மாநில மந்திரி மறுக்கும் நிலையில் தெருவில் பெண்ணிடம் கொடூரமாக நடந்துக் கொள்ளும் சம்பவம் அடங்கிய வீடியோவானது வெளியாகி உள்ளது. வீடியோவை பார்த்த வீட்டுக்காரர் கண்ணீர் வடித்து உள்ளார், மக்கள் வசிக்கும் பகுதியிலே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் மற்ற இடங்களில் பாதுகாப்பு என்பது எப்படி? என கேள்வி எழுப்பிஉள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய வீட்டிற்கு தோழிகளுடன் வந்து சிசிடிவி பதிவுகளை கேட்டார், அப்போதுதான் பார்த்தோம் என்று கூறிஉள்ளார்.

பாலியல் தொல்லை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே சில ஆண்கள் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளது. இளம் பெண் தெருவில் தனியாக சென்றதை பார்த்து திட்டமிட்டே பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.