சசிகலா குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய மோடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு வெள்ளை மலர்கள் கொண்ட மலர் வளையம் வைத்து தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார்.

அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி சென்ற பிரதமர் மோடி ஆறுதல் வார்த்தைகள் கூறினார். சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதலாக பேசினார். இளவரசி, திவாகரன், உள்ளிட்டோர்களிடமும் ஆறுதலாக பேசினார் மோடி. அந்த நேரத்தில் அருகில் வந்த ஒ.பன்னீர் செல்வம், மோடியைப் பார்த்து குமுறி குமுறி அழுதார். ஒ.பன்னீர் செல்வத்தைப் பிடித்து ஆறுதல் சொன்னார் மோடி ஆசுவாசப்படுத்தினார். கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி.

அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார். இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி. சசிகலா குடும்பத்தினரை தேடி சென்று பிரதமர் மோடி ஆறுதல் சொல்லி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அங்கு வந்து முதல்வரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அருகில் கவர்னர் வித்யா சாகரராவ் உடனிருந்தார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுலும் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Share This Post