அவசரமாக நிறைவேற்றும் 4 திட்டங்கள் அதிமுக மு.க.ஸ்டாலின் ஆவேசம்

அதிமுக அரசு இதுவரை கடுமையாக எதிர்த்து வந்த 4 திட்டங்களுக்கு தற்போது ஆதரவு தெரிவித்து அதனை அவசர, அவசரமாக நிறைவேற்றுகிறது. இதனை எதிர்த்து எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக அரசை யாரோ வெளியில் இருந்து இயக்குவதாகவும், அவர்களை முயல் வேடமிட்ட முதலை எனவும் விமர்சித்துள்ளார்.

அந்த அறிக்கையில், அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சனைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.