உணவு வாகனங்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் 12 பேர் பலி

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்கள், பசியினாலும் வாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் உலக நாடுகளின் முயற்சியால் சிரியாவில் அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட சுமூகமான தீர்வின் மூலம், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.

சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் போராளிகளை நுழையவிடாமல் ராணுவத்தினரும், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள இடங்களை அரசுப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்து விடாதபடி புரட்சிப் படையினரும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை சுற்றி அரண் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.

சிரியாவில் இருதரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சார்பில் ஏராளமான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டபோதும் அவை வெகுதொலைவில் உள்ள மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் கடுமையான உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ அரிசி சுமார் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் இங்குள்ள பெண்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

குழந்தைகள் உள்பட சுமார் 2 லட்சம் மக்கள் கொடூரமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிரியாவில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐ.நா.சபையில் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மருந்து வகைகள் செம்பிறை தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று 18 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு வாழ்ந்துவரும் சுமார் 78 ஆயிரம் மக்களுக்கு இந்த பொருட்களை பகிர்ந்து அளிப்பதற்காக உரேம் அல் கப்ரா என்ற இடத்தில் உள்ள ஒரு கிடங்கில் நிவாரணப் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வானில் பறந்துவந்த போர் விமானங்கள் ஐந்து ஏவுகணைகளை அந்த கிடங்கியின் மீது வீசின. இந்த தாக்குதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த 18 லாரிகளும் தீக்கிரையாகின. கிடங்கு கட்டிடம் சேதம் அடைந்தது. செம்பிறை அமைப்பை சேர்ந்த 12 பேரும் பலியாகினர்.

ரஷியா அல்லது சிரியா நாட்டின் விமானப்படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.