சென்னை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மருத்துவத்துக்கும் தலைநகரம்: விஜயபாஸ்கர் பேச்சு

சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வலிமை மிகுந்த வளமான தமிழகத்தை பல புரட்சிகரமான திட்டங்கள் மூலம் உருவாக்கி வருகிறார்கள். சுகாதாரத்துறையில் தொடர்ந்து தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதிலும் சென்னை மாநகரம் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கியிருக்கிறார்கள்.

இங்கு நடைபெறும் 2 நாள் சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் அனைவருக்கும் உயர்தர மருத்துவம் எளிதாக, எளிமையாக மிகக்குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.

அப்பல்லோ மருத்துவக் குழுமம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச மருத்துவ குழுமங்களுடன் இணைந்து சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி வருகிறது.

இதில் உலகில் உள்ள மருத்துவ நிபுணர்கள் அனைவரும் பங்குப்பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவக்குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப்ரெட்டி 1983-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையை தொடங்கி இதுவரை 45 கோடி உயிர்களை காப்பாற்றி ஆசியாவிலே பெரிய நம்பிக்கைப் பெற்ற, மருத்துக்குழுமமாக அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது.

தமிழக அரசின் சார்பில், அப்போலோ மருத்துவமனையை பாராட்ட நான் கடமைபட்டிருக்கின்றேன்.

முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட தொலை நோக்கு திட்டம் 2023-ல் குறிப்பிட்டவாறு தமிழகம் இந்தியாவில் தன்னிகரில்லா முதன்மை மாநிலமாக சமூக வளர்ச்சியில் மட்டுமில்லாமல் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக மருத்துவத்திலும் சிறந்து விளங்குகிறது. உலகத்தரத்தில் மருத்துவம் பெறுவதற்கு ஏதுவாக அரசு தனியார் மருத்துவ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தேசிய மேம்பாட்டு தரக்குழு அங்கீகாரம் 13 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. 2017-க்குள் மேலும் 125 அரசு மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளை பதிவு செய்வதற்கு தமிழக அரசு தேசிய மேம்பாட்டு தரக்குழு அங்கீகாரம் தேவை என்ற நிலை வெகு விரைவில் உருவாக உள்ளது. இதன் மூலம் மருத்துவ சேவையை தரம் மேலும் உயர்ந்து ஏழை எளிய மக்களும் செல்வந்தர்களுக்கு இணையான மருத்துவ சேவையை பெறுவதற்கு வழிவகுக்கும்.

தமிழக அரசின் மருத்துவ சீர்த்திருத்தங்கள் இந்திய அரசாலும், தனியார் குழுக்களாலும், உலக சுகாதார நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மெனா ஹெப்டே முழங்கியுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக மருத்துவத்தில் திகழ்ந்தாலும் தமிழகத்தின் இலக்கு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிடும் வகையில் அமைய வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் விருப்பமாகும். இவ்விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.