அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிரான வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக தில்லி பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செய்தியாளர் ஆமீர் கான் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: கடந்த 2004-ஆம் ஆண்டு, 2011 மற்றும் 2014-ஆம் ஆண்டு தேர்தல்களில் தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் கல்வித் தகுதி தொடர்பாக பொய்யான தகவலை அளித்துள்ளார்.

இதன்மூலம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125-ஏ பிரிவை அவர் மீறியுள்ளார். எனவே அந்த சட்டப்பிரிவை மீறி குற்றங்கள் இழைத்த காரணத்துக்காக ஸ்மிருதி இரானியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லி பல்கலைக்கழகத்துக்கும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஸ்மிருதி இரானிக்கு சம்மன் அனுப்ப மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘இரானி அமைச்சராக இருப்பதால் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்து விட்டன, கோர்ட்டிற்கு நகல் ஆவணங்கள் தேவையில்லை. எனவே, ஸ்மிருதி இரானிக்கு எதிராக சம்மன் அனுப்பக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்தார்.