முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகிறார்.

ஆவடி தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவருமான மாஃபா பாண்டியராஜன், இதுவரை சசிகலா அணியில் இருந்தார். தற்போது தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரவு தெரிவிக்க அவரை சந்தித்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று தனது ஆதரவை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சசிகலாவை ஆதரித்து வந்த நிலையில் பாண்டியராஜன் திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சசிகலா ஆளுநரை சந்தித்த போது அவருடன் பாண்டியராஜன் இருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகலா அணியில் இருந்த பாண்டியராஜன் ஓ.பி.எஸ். அணிக்கு தாவியுள்ளார். மேலும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என வாக்காளர்கள் ஊடகங்களில் வலியுறுத்தியதால் அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாவது: வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன். ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் அதிமுகவின் ஒற்றுமையை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளேன் எனவும் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் தெரிவித்ததோடு தற்போது முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் முதல் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகும். மாஃபா பாண்டியராஜன் ஆதரவு அளித்துள்ளதால் முதல்வர் ஓ.பி.எஸ். அணி வெகு வேகமாக முன்னேறி வருகிறது.