சென்னை அருகே பட்டாபிராமில் ஐடி பூங்கா: அமைச்சர் கே.பாண்டியராஜன்

சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி இணைந்து வெளியிட்ட `தாட் லீடர்ஷிப் ரிப்போர்ட் ஆன் பில்டிங் த டிஜிட்டல் ஸ்டேட்’ என்னும் விழா மலரை வெளியிடும் தமிழக கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜனிடமிருந்து முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் என். சந்திரசேகரன் (வலமிருந்து இரண்டாவது). உடன் (இடமிருந்து) கனெக்ட் 2016 தலைவர் ரவி விஸ்வநாதன், சிஐஐ தமிழக தலைவர் ரமேஷ் கிமல் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் டி.கே.ராமசந்திரன்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் கனெக்ட் என்னும் இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.

இந்தக் கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட தமிழக கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கூறும்போது, சென்னை அருகே பட்டாபிராமில் ஐடி பூங்காவை அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு தொழில்நுட்ப மையங்கள் செயல்பட்டு வருகின் றன. மாநில அரசு ஐடி துறையை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது ஐடி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஐடி என்றாலே தமிழகம் நினைவுக்கு வரும். விரைவில் கர்நாடகம் மற்றும் என்சிஆர் பகுதியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மேம்பட்டிருக்கிறது. 12-ம் வகுப்பு முடித்தவர்களில் 46 சதவீதத்தினர் கல்லூரிக்கு செல்கின்றனர். இதனை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.