தமிழகம் முழுவதும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. திருவள்ளூரில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது.

இதனால் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்ட மாணவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர். குமரி மாவட்டத்திலும் மழை பெய்தது. அதிகாலையில் பெய்த மழையினால் இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிகாலை மிதமான மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, வல்லம், தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

கோவையில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காந்திபுரம், ரயில் நிலையம், உக்கடம், சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டியது.