ரூ.500, 1000 நோட்டு அறிவிப்பை வாபஸ் பெற வாலிபர் கருப்பு கொடி போராட்டம்

ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி வயர்லெஸ் டவர் மீது ஏறி வாலிபர் ஒருவர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அண்ணா மேம்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே வயர்ெலஸ் டவர்  உள்ளது. இந்த வயர்ெலஸ் டவரில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கருப்பு கொடியுடன் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் “மோடி அரசு செயல் திட்டங்களை எதிர்த்து எங்கள் இளைஞர்களின் போராட்டம் நடைபெறும்” என்று கூறி இறங்க மறுத்து விட்டார். பின்னர் மேலே இருந்து துண்டு பிரசுரங்களை வீசி எறிந்தார். அந்த துண்டு பிரசுரத்தில் “மோடி அவர்களே, மத்திய அரசில் ஆட்சி அமைத்ததற்கு ஒரே காரணம் தான்.

இலங்கையில் உள்ள தமிழ் ஈழ மக்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் ஆட்சி என்ற ஒரு வார்த்தை தான். மத்தியில் நீங்கள் ஆட்சி அமைத்து இருக்கிறீர்கள். இதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு நல்லதாக இருந்தாலும் பாதிக்கப்பட்டிருப்பது என்போன்ற சாதாரண நடுத்தர பொதுமக்கள் தான்.

அரசு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி செயல்படவில்லை. ஒரு கூலித் தொழிலாளர்களின் ஒரு நாள் வருமானம் ரூ.500. எந்த வேலைக்கும் போகாமல் வங்கியில் ஏ.டி.எம் கார்ட்டை வைத்து கொண்டு இருந்தால் எப்படி பொது மக்கள் வாழ்வது. கடந்த ஆண்டு இதே நாட்களில் மழையினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இழந்து இருக்கிறோம்.

இன்னும் சரியாக இயல்பு நிலைக்கு வரவில்லை. அதற்குள்ளே இப்படி ஒரு செயல் திட்டங்கள் கொண்டு வந்ததால் எப்படி வாழ்வது. ஊழலை அழித்துவிடுகிறேன் என்ற சொல்லி உழைப்பாளிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் என 10 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் நடந்த சம்பவத்தால் அங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அண்ணா மேம்பலம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு இடையே டவர் மேல் இருந்த வாலிபரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் மாவட்ட கட்டுமான்னார்கோவில்  பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(30) என்றும் தெரியவந்தது. மீட்கப்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் ரகசியமாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

More