சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பேரணி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த விவரம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். அத்துடன், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. அதுபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதற்கென ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீருவோம் எனும் வகையில் ஆதரவு திரட்டினர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென சென்னை மெரீனாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். கலங்கரை விளக்கத்தில் திரண்ட அவர்கள் உழைப்பாளர் சிலை வரை பேரணியாக சென்றனர். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, பாரம்பரிய வேட்டி அணிந்து, கோஷமிட்டு இளைஞர்கள் சென்றனர்.

இதுகுறித்து பேரணியில் கலந்துகொண்டோர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. இதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருப்பது கலாசாரத்துக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டு கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதற்காக, மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால், எங்களுக்கு தமிழன் என்ற உணர்வு உள்ளது. அதுபோல், ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த அலங்காநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு, தமிழர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை எந்தவகையிலும் துன்புறுத்தியதில்லை. உழவர்களின் தோழனாகவே இன்று வரை காளைகள் இருந்து வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டு நடத்த இந்த ஆண்டு முதல் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக, தற்போது அமைதிப் பேரணியை நடத்தியுள்ளோம். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொள்வோம் என்றனர்.