ஜெயலலிதாவை காதலிப்பதாக விளையாட்டுத்தனமாக கூறினேன்: மார்கண்டேய கட்ஜூ

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 வார காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சரியாகி விரைவில் பணிக்கு திரும்ப ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் தமிழர்களை தாழ்த்தியும், மலையாளிகளை உயர்த்தியும் பதிவிட்டிருந்தார் கட்ஜு. அதேபோல காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பித்த தருணங்களில், குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டபோது, நீதிமன்றத்தை விமர்சனம் செய்தார். கர்நாடக மக்கள் அப்பாவிகள் என்பதை போலவெல்லாம் பதிவிட்டார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தனது ஃபேஸ்புக்கில் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; நான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதா மிக இளமையாக இருந்தார், கவர்ந்திழுக்கும் அழகு அவர். இதனால் நான் அவரை காதலித்தேன். ஆனால் அது ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஏனென்றால் அது ஒரு தலைக் காதல். அவர் இப்போதும் அழகாக இருக்கிறார். அவர் உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

அவர் ஒரு பெண்சிங்கம் போன்றவர். அவரை எதிர்ப்பவர்கள் சிங்கவால்குரங்கு போன்றவர்கள். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மார்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்து, சர்ச்சையாகியது. இதனால் அவர் தனது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் இன்று அதற்கு “ஜெயலலிதாவை காதலிப்பதாக விளையாட்டுத்தனமாக  கூறினேன்” புதிய விளக்கம் ஒன்றை அளித்து பதிவிட்டுள்ளார்.