மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது

பள்ளிகொண்டா அருகே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் மு.க.ஸ்டாலின் காயமின்றி உயிர்தப்பினார்.

பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்றிரவு முன்னால் சென்ற மர்ம கார் திடீர் பிரேக் போட்டதால், அந்த கார் மீது மோதி மு.க.ஸ்டாலின் சென்ற காரின் முன்பகுதி நொறுங்கியது. தொடர்ந்து பின்னால் வந்த 2 கார்களும் சேதம் அடைந்தன. தர்மபுரியில் இன்று நடக்கவுள்ள திமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காரில் புறப்பட்டு சென்றார்.

வேலூர் மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் எம்எல்ஏ ஆர்.காந்தி தலைமையில் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர் பள்ளி கொண்டா டோல்கேட்டில் நேற்றிரவு திமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டோல்கேட்டை கடந்தபோது, முன்னால் சென்ற கர்நாடக மாநில பதிவுள்ள கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது.

இதில் மு.க.ஸ்டாலின் காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. காரில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் மற்றும் கார் டிரைவர் எந்த வித காயமும் ஏற்படாமல் உயிர்தப்பினர். இந்த விபத்தையொட்டி ஸ்டாலின் காருக்கு பின்னால் சென்ற அனைத்து கார்களும் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தி.மு.க.வினர் இடையே காட்டுத்தீ போல பரவியது. தகவலறிந்ததும் குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு பகுதி தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலின் கார் விபத்துக்குள்ளானதை பார்த்து ஆத்திரம் அடைந்தனர். சுங்கச்சாவடியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.