ரூ.125 கோடி கருப்பு பணம் வைத்து இருந்த வழக்கறிஞர்

கருப்பு பணம் பதுக்குவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மத்திய அரசு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும், அதே சமயம், நாட்டில் கருப்பு பணம் பதுக்குபவர்களை கண்டறிந்து, அவர்களிடன் வரி வசூலிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் தாமாகவே முன் வந்து விவரத்தை தெரிவித்தால், அவர்கள் அபராதத்தோடு விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த மத்திய அரசு அதற்காக 4 மாதம் காலக்கெடுவையும் விதித்தது. கடந்த 30 ஆம் தேதியுடன் அந்த காலகெடு முடிந்துவிட்டது. இந்த நிலையில், தாமாக முன் வந்து கணக்கு காட்டாத கருப்பு பண முதலைகள் மீது வருமான வரித்துறை தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் பிரபல வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகளின்போது, அந்த வழக்கறிஞர் ரூ.125 கோடி அளவுக்கு கருப்பு பணம் குவித்து வைத்திருப்பது குறித்து கணக்கு அளித்தார். அவர் தானாக முன்வந்து கணக்கு அளித்து அபராதம் செலுத்தி, கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் வாய்ப்பை பயன்படுத்தாமல் தவற விட்டு, இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர் மீது வழக்கு தொடரவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.