கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ பிடித்து 60 கடைகள் எரிந்து நாசம்!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 60க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

அதில், புடவைக் கடைகளும், பழக்கடைகளும் பெருமளவில் அடங்குவதாகவும், இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல கோடிகளைத் தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதாலேயே பொதுச் சந்தையின் கடைத் தொகுதி விரைவாக பற்றி எரிந்துள்ளது. பொலிஸாரும்- இராணுவத்தினரும் தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அத்தோடு, தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 5க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பெரும்பாலான கடைகள் தகரக் கொட்டிகளாலேயே அமைக்கப்பட்டிருந்தன. இதனாலேயே, தீ வேகமாக பரவியுள்ளதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியை முழுவதுமாக சீமெந்தினால் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.