தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி!

விரைவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் நடிகர் விஷாலின் ‘பஞ்ச பாண்டவர்’ அணி சார்பாக நடிகை குஷ்பு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த

தேர்தலில் விஷால் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார்கள்.அதிலிருந்து

விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் தொடர்ச்சியான அறிக்கைப் போர் நடைபெற்று வந்தது.

அதன் உச்ச கட்டமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டார். எனவே அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விஷால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரவுள்ள 2017ம் ஆண்டு சமூகத்துக்கு பல நல்ல விஷயங்கள் செய்வதாக அமையவேண்டும். அந்த வகையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் குஷ்பு தலைவராக போட்டியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் தயாரிப்பாளர் தாணு தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செய்தியானது திரையுலகில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.