கேரள மருந்து கழிவுகளை கோவையில் கொட்டிய 24 லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டம், எட்டிமடை அருகே உள்ள நெல்லிக்காடுத் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24-லாரிகளில் கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்றனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மருத்துவ கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர்.

பின்னர் இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் எட்டிமடை பஞ்சாயத்து அலுவலர் வளர்மதி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தோட்டத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், செல்லப்பகவுண்டரின் தோட்டத்தை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது இலியாஸ்  என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவர் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டு வரும் மருத்துவமனை கழிவுகளை இங்கு வந்து கொட்டி அதை தரம் பிரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து கே.ஜி.சாவடி போலீசார் தோட்ட உரிமையாளர் செல்லப்பகவுண்டர் (வயது-75), கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது இலியாஸ் (வயது-57), கோழிக்கோட்டை சேர்ந்த சாஜி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சபீர் (வயது-55). ஆகியோர் மீது சுகாதார கேடு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து 24 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.