பொள்ளாச்சியில் தோட்டம் ஒன்றில் கேரள மருத்துவ கழிவுகள் புதைப்பு: தோட்ட உரிமையாளருக்கு வலைவீச்சு

பொள்ளாச்சி அடுத்த புரவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பகுதியில் சீகோபாலபுரம் என்ற இடத்தில் கடந்த ஆண்டு 8 ஏக்கர் தோட்டம் வாங்கினார். பின்னர் இந்த தோட்டத்தில் வெண் பன்றிகள் பண்ணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசிகொண்டு இருந்தது. இதனால் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இதுபற்றி மணிகண்டனிடம் கேட்டனர். அப்போது அவர் வெண்பன்றிகள் வளர்த்து வருவதால் துர்நாற்றம் வருகிறது என தெரிவித்தார்.

பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மணிகண்டனின் தோட்டத்துக்கு லாரி வந்தது. அந்த லாரியில் மூட்டை மூட்டையாக வந்து இறக்கி வைக்கப்பட்டது.

இதனால் மேலும் அப்பகுதி விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றியும் மணிகண்டனின் விவசாயிகள் கேட்டனர். அதற்கு அவர் வெண்பன்றிகளுக்கு தீவனம் வாங்கி போடுகிறோம் என்று கூறினார்.

இந்த நிலையில் மணிகண்டனின் தோட்டத்தில் ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு இருப்பதையும், துர்நாற்றமும் வந்ததால் விவசாயிகள் இதுபற்றி கண்காணிக்க முடிவு செய்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வேன், மணிகண்டனின் தோட்டத்துக்குள் வந்தது. அப்போது அங்கிருந்த சிலர், தோட்டத்தில் குழியை தோண்டி வேனில் இருந்த மூட்டைகளை குழிக்குள் போட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது இதை அப்பகுதி விவசாயிகள் மறைந்திருந்து கண்காணித்தனர். பின்னர் விவசாயிகள் அனைவரும் திடீரென தோட்டத்துக்குள் புகுந்து முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத வேன் டிரைவர் மற்றும் அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி தப்பி சென்று விட்டனர்.

இதனால் விவசாயிகள், மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மருத்துவ கழிவுகள், ஆபரேசன் போது எடுக்கப்படும் மனித உறுப்பு கழிவுகள் ஆகியவை இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதுகுறித்து வடக்கி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து தோட்டத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணையில் மணிகண்டன் கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ கழிவுகளை காண்டிராக்ட் முறையில் பணம் வாங்கி கொண்டு வாங்கி தனது தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வந்தது தெரிய வந்தது. இதற்காக தான் அவர் அப்பகுதியில் தோட்டம் வாங்கி வெண் பன்றி பண்ணை வைத்திருப்பது போல் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

தற்போது மணிகண்டன் தலைமறைவாக இருந்து வருகிறார். இதுதொடர்பாக ராமபட்டணம் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.