கருணாநிதிக்கு மூச்சுத்திணறல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

92 வயதாகும் கருணாநிதி, ஊட்டச்சத்து, நீர்ச் சத்து குறைபாடு காரணமாக, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வாமையால் ஒரு மாதம் அவர் பாதிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். அவரது வீட்டுக்கு டாக்டர்கள் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு வீடு திரும்பினார். எனினும் வீட்டில் முழுமையாக அவர் ஓய்வு எடுப்பது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். மேலும் கருணாநிதி முழுமையான குணம் அடைவதற்குத் தேவையான மருத்துவம், செவிலியர் பராமரிப்புகளை காவேரி மருத்துவமனை பணியாளர்கள் அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென தொண்டை-நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக அவர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் நேற்று இரவு அவருடன் மருத்துவமனைக்கு வந்தனர்.

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதை அடுத்து காவேரி மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி எம்.பி., செல்வி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் நேற்று இரவு முதல் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர்.