கர்நாடக காவலர் தமிழக வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் கர்நாடக காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தமிழக வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் பதற்றம் நிலவுவதால், கடந்த, 25 நாட்களாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில், அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கர்நாடக எல்லையான பள்ளூர் பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக விசாரணை நடத்த, எல்லை வழியாக, கர்நாடக போலீசார் தமிழகம் வந்தனர்.

கர்நாடக போலீசார் சாதாரண உடையில் இருந்ததால் அவர்களது அடையாள அட்டைகளை காட்டுப்படி தமிழக போலீசார் கேட்டதாக தெரிகிறது. இதில் தமிழக போலீசாருக்கும், அத்திப்பள்ளி காவல்துறை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து கோபத்துடன் சென்ற எஸ்.ஐ., சீனிவாஸ் நேற்று மாலை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்திற்கு வந்த, தமிழக பதிவு எண் கொண்ட மூன்று லாரிகளின் கண்ணாடி உடைத்தார். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை எஸ்.ஐ., சீனிவாஸ் உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கர்நாடக போலீஸ் உயரதிகாரிகளிடம், தமிழக போலீசார் புகார் செய்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அம்மாநில போலீசார் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.