நடிகை ஜோதிகா திரைப்படத்திற்கு டைட்டில் கொடுத்த உலக நாயகன்

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதையடுத்து, பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் அறிவித்தார்.

இதையடுத்து, ‘குற்றம் கடிதல்’ படத்தின் இயக்குநர் பிரம்மா சொன்ன கதைக்கு ஓகே சொன்ன ஜோதிகா அப்படத்தில் நடித்து வந்தார். இதற்காக அவர் மோட்டார் பைக் ஓட்டவும் பயிற்சி மேற்கொண்டார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்திற்கு ‘மகளிர் மட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான ’மகளிர் மட்டும்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜோதிகாவின் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் பிரம்மா விரும்பியதால், கமல்ஹாசனிடம் இருந்து இந்த தலைப்பை ஜோதிகா கேட்டு வாங்கியுள்ளார். இதற்காக சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ஜோதிகாவும், ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு க்ரிஸ் பிக்சர்ஸ் இணை தயாரிப்பு மேற்கொள்கின்றது.

இப்படத்தில் ஜோதிகா ஆவணப் பட இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.